தமிழர் வரலாறு நமக்குச் சொல்வது இராவணன்:👇
தமிழகத்தில் இராவணனின் பிம்பம் என்ன என்பதை இரண்டாயிரம் ஆண்டு சங்கத் தமிழிலக்கியங்கள்,தேவாரம்,
ஆயிரமாண்டுகளான கோவில்கள் தெளிவாக எடுத்தியம்புகின்றன.ஆனால் நேற்று வந்தவர்கள் நமக்கு புது வரலாறு சொல்கிறார்கள் முப்பாட்டன்,தமிழன் என்று.
இந்த நிலமெங்கும் இராவணனை பற்றி ஒரே வகையான குறிப்புகள்தான் உள்ளது.கயிலாயத்தை அசைக்கப் பார்த்து சிவனின் கட்டை விரலால் அழுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டவன்.அவன் ஸ்ரீ ராமனின் பத்தினி சீதையை கவர்ந்த அரக்கன்.ராமனால் வதம் செய்யப்பட்டவன் இவ்வளவுதான்.இன்று அரசியலுக்காக 50 வருடத்தில் கட்டிவிடப்பட்ட போலி தமிழ் பெருமிதங்கள் உடைத்து வீசப்படத்தக்கது.தமிழ் சங்க இலக்கியங்களே இராவணனை இவ்வாறு சுட்டுகிறது.👇
____________________________________________________________________________________________________
#புறநானூறு_378
|| கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை
வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை||
பொருள்:போர்க்குணம் கொண்ட ராமனின் உடனாக வந்த அவன் மனைவி சீதையை,தன் வலிமை மிகுந்த கரங்களை கொண்ட அரக்கன் கவர்ந்து சென்றான் என #ஊன்பொதி_பசுங்குடையார் ராமாயண கதையை நமக்கு விளக்குகிறார் புறப்பாடலில்.அன்றே இராவணனை அரக்கனாகத்தான் சுட்டியுள்ளனர்.
#கலித்தொகை - [பாடல் 38 வரிகள் 15]
|| இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக
ஐயிருதலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன்போல ||
பொருள்: இமயத்தை வில்லாக வளைத்த பரமசிவன் உமையவளுடன் வீற்றிருந்தான்.அப்போது, பத்துத் தலைகளை உடைய அரக்கர் தலைவன் இராவணன் காப்புப் பொலியும் தன் வலிமையான கைகளை மலையின் கீழே புகுத்தி அதை தூக்க முயன்றான்; எடுக்க முடியவில்லை. அதனால் மலையின் கீழ் சிக்கி வருந்தினான்.என அரக்கன் இராவணன் எம்பெருமான் வீற்றிருந்து அருளும் கைலாயத்தை அசைக்கக் கூட முடியவில்லை ஆனால் தன் ஆணவத்தால் முயன்றான் என்பதை கலித்தொகை சொல்கிறது.
அடுத்து தேவாரம் சொல்வதை பாருங்கள்👇
____________________________________________________________________________________________________
#அப்பர்தேவாரம்
|| அரக்க னார்தலை பத்து மழிதர
நெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவிய
பொருப்ப னாருறை புள்ளிருக்கு வேளூர்
விருப்பி னால்தொழு வார்வினை வீடுமே ||
இராவணனது தலைபத்தும் அழியும்படி நெருக்கிப் பெருமைமிக்க திருவடி மலர்களை நிறுவிய திருக்கயிலாயமலைத் தலைவர் உறைகின்ற புள்ளிருக்குவேளூரை விருப்பத்தினால் தொழுவார் வினை கெடும்.
#திருஞானசம்பந்தர்தேவாரம்
|| பெருக்குஎண்ணாத பேதைஅரக்கன் வரைக்கீழால்
நெருக்குண்ணாத் தன் நீள்கழல் நெஞ்சில் நினைந்துஏத்த
முருக்குண்ணாது ஓர் மொய்கதிர்வாள்தேர் முன்ஈந்த
திருக்கண்ணார் என்பார் சிவலோகம் சேர்வாரே ||
பொருள்:அன்போடு வழிபட்டால் ஆக்கம் பெறலாம் என்று எண்ணாத அறிவிலியாகிய அரக்கன் இராவணன் கயிலையைப் பெயர்த்த போது அதன்கீழ் அகப்பட்டு நெருக்குண்டு நல்லறிவு பெற்று விரிந்த புகழை உடைய தன் திருவடிகளை அவன் நெஞ்சினால் நினைந்து போற்றிய அளவில் அவனுக்கு அழிக்கமுடியாத,ஒளியினை உடையவாளையும் தேரையும் முற்காலத்தில் வழங்கியருளிய சிவபிரான் வீற் றிருக்கும் தலமாகிய திருக்கண்ணார் கோயில் என்று கூறுவார் சிவலோகம் சேர்வர்.
இதிலும் சம்பந்தர் 'அறிவிலி,அரக்கன்' இராவணன் என்றே சொல்கிறார்.சிவபெருமான் அவனுக்கு வழங்கிய சந்திர ஹாசம் எனும் வாளினைத்தான் குறிக்கிறார்.......!
இதையே கம்பனும் சொல்கிறான் பாருங்கள்👇
____________________________________________________________________________________________________
#சுந்தரகாண்டம்
|| விண்ணவர் ஏத்த, வேத முனிவர்கள் வியந்து வாழ்த்த
மண்னவர் இறைஞ்சச் செல்லு மாருதி மறம்முன் கூர
அண்ணல் வாளரக்கன் தன்னை அமுக்குவென் என்னக்
கண்ணுதல் ஒழியச் செல்லும் கையிலையங்கிரியும் ஒத்தான் ||
பொருள்: தேவர்கள் துதி செய்கிறார்கள்; வேதம் உணர்ந்த முனிவர்கள் வியந்து வாழ்த்துகிறார்கள்; பூமியில் உள்ளவர்கள் வணங்குகிறார்கள்; வான வீதிவழியே பறந்து செல்லுகின்ற அனுமன்,சந்திரஹாசம் எனும் சிவன் தந்த வாளையுடைய இராவணனை கீழே போட்டு அழுத்துவேன் என்று விரையும் கயிலைமலையைப் போல காட்சியளித்தான்.
சந்திரஹாசம் எனும் சிவன் தந்த வாளினை உடைய இராவணனை,கீழே போட்டு அழுத்துவேன் எனும் கயிலை மலையாகவே காட்சியளித்தாராம் அனுமன்.கடைசியில் வீண் பெருமை பேசும் இராவணனை சீதாதேவி கேட்பதாக கம்பன் கேட்கிறான்.👇
|| குன்று நீ எடுத்த நாள் தன்
சேவடிக் கொழுந்தால் உன்னை வென்றவன் ||
பொருள்: கயிலாய மலையை நீ பெயர்த்தாயே! அப்போது சிவபெருமான் தமது கால்விரல் துணியை அழுத்தி உன்னை வென்றாரன்றோ? என அரக்கனின் ஆணவ தோல்வியை சுட்டிக் காட்டுகிறார்.
மீண்டும் அப்பர் தேவாரம்👇
|| கனகமா வயிர முந்து மாமணிக் கயிலை கண்டும்
உனகனா யரக்க னோடி யெடுத்தலு முமையா ளஞ்ச
அனகனாய் நின்ற வீச னூன்றலு மலறி வீழ்ந்தான்
மனகனா யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே ||
பொருள்: பொன்னும்,வயிரமும் முற்பட்ட சிறந்த இரத்தினங்களும் உடைய கயிலையைப் பார்த்தும் அதனைப் பெயர்த்துவிடும் அகந்தையுற்ற மனத்தானாய் அரக்கன் ஓடிவந்து,அதனைப் பெயர்க்க முற்பட்ட அளவிலே பார்வதி அச்சம் கொள்ளப் பாவ மில்லாதவனாய் நிலைபெற்று,எல்லோரையும் அடக்கி ஆளும் பெருமான் விரலைச் சற்று ஊன்றிய அளவிலே அரக்கனாகிய இராவணன் அலறிக் கொண்டு செயலற்றுக் கீழே விழுந்தான்.எம் பெருமான் நிலைபெற்ற உள்ளத்தனாய் விரலை அழுந்த ஊன்றி இருந்தானாயின் மீண்டும் இராவணன் கண்விழித்துப் பார்க்கும் வாய்ப்பே ஏற்பட்டிருக்க மாட்டாது.
மேற்கண்டபடி சைவ,தமிழ் சங்க இலக்கியங்களின் தடத்தின் வழியேயும் இராவணன் அரக்கனே.கயிலாயத்தை ஆணவத்தால் அசைக்கப் முற்பட்டு சிவனால் அழுத்தப்பட்டு அலறி வீழ்ந்தவன்.இதுதான் அவனது பிம்பம்.
No comments:
Post a Comment